ஓமியோபதி ஆளுமை: மேஜர் தி சா .ராஜு

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானத்தில் 1926 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தவர் மேஜர் ஜெனரல் தி. சா. ராஜு அவர்கள். அப்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

இவரைத் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு எனும் தி. சா. ராஜு என்று சொல்லும்போது பெயருக்கான காரணத்தைப்  புரிந்து கொள்ள முடியும். 


எந்திரவியலில் பட்டப்படிப்பை முடித்தவர் ராணுவத்தில் மேஜராகச் சேர்ந்தார். ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் அறிந்திருந்த அவருக்கு ராணுவத்தில் சேர்ந்த பின் பஞ்சாபி மொழியும் கைவர அமைந்தது.

முதலில் தனது அனுபவங்களை வடநாட்டிலிருந்து எழுதிக் கல்கிக்கு அனுப்பினார். அவை சுற்றுலாத்தலங்கள் பற்றியவையாக அமைந்தன. பின்னர் கலைமகள், கல்கி ஆகியவற்றில் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். 

சிறுகதைகள் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 'காட்டாறு' என்ற ஒரு நாவலை எழுதினார். தனது சிறுகதைகளைத் தொகுத்து 'காட்டு நிலா' என்ற பெயரில் வெளியிட்டார். அதன் பின்னர் எழுதப்பட்ட அனைத்துக் கதைகள் சிறுகதைகளைத் தொகுத்து "பட்டாளக்காரன்" என்று ஒரு நூலாக வெளியிட்டார். அனைத்தும்தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 


இப்படித் தனது மொழி ஆளுமையால் கதைகளையும் கட்டுரைகளையும் பயணக் குறிப்புகளையும் எழுத முடிந்தது. அவர் அவருக்கிருந்த இருந்த ஓமியோபதி ஆர்வம் தொடர்பாக ஹோமியோபதி பற்றிய கட்டுரைகளை எழுதத் தொடங்கினார் 


பன்முகத் திறமைகள் இருந்த தி.சா.ராஜு அவர்களுக்கு ஹோமியோபதி துறையில் இந்தியப் பிதாமகர்களில் ஒருவரான சேசாத்திரி அவர்களிடம் தொடர்பு ஏற்பட்டது. அது தமிழருக்கு நன்மை பயக்கும் நல்ல விளைவாகவே அமைந்தது. 

சேசாத்திரி அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் அலோபதி பயின்ற மருத்துவர்.  அவர் ஹைதராபாத் நிஜாமிடம் உயர் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியவர். அங்கிருந்தபோது ஓமியோபதி மருத்துவ முறையை அறிந்து கொண்டு அதனை முறையாகப் பயின்று மன்னர் உட்படப் பலருக்கும் பயன்படுத்தியவர். அவருடைய நிஜாம் காலத்திய வரலாறு என்ன என்பதையும் தி.சா.ராஜு அவர்கள் பின்னர் விரிவாக எழுதியுள்ளார்.


இந்த நிலையில், சேசாத்திரி அவர்களோடு இணைந்து கொண்ட ராஜு  அவர்கள் ஓமியோபதியைக் கைப்பற்றிக் கொண்டார். ஓமியோபதித் துறைமீது அவருக்கு மிகப்பெரிய நாட்டம் ஏற்பட்டது. அவர்களின் மறைவுக்கு பின் அவரது நோயாளிகள் பலருக்கு ராஜு  அவர்கள் சிகிச்சை தந்தார்.


வட இந்தியாவில் ராணுவத்தில் பணியாற்றிய போதும் அதன் பின்னரும் பல நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்திருக்கிறார். இதன் வழியாகக்  கிடைத்த அனுபவங்களை ஓமியோபதி மருத்துவம் அன்று பெயரில் நூலாக்கியுள்ளார். 

"ஹோமியோபதி மருத்துவம்" என்ற பெயரிலும் பின்னர் மற்றொரு அனுபவங்கள் தொகுப்பு "ஹோமியோபதி அற்புதங்கள்" என்ற நூலிலும் வெளி வந்திருக்கின்றன 


"ஹோமியோபதி" என்ற துறை சார்ந்து,  இந்த மருத்துவத்துறை சார்ந்து தி.சா.ராஜு அவர்கள் தனது அனுபவங்களை எழுதிய புத்தகங்கள் அல்லது கட்டுரைகள்  மாணவர்களுக்கான பாடத்திட்டமாகவே அமைக்கலாம். அந்த அளவுக்கு அவருடைய அனுபவங்கள் வழியாக அவர் எழுதிய வகையும் முறையும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தி.சா.ராஜு அவர்களின் தமிழ் அறிவும் மொழி அறிவும் பண்பாட்டு அறிவும் பல இடங்களிலிருந்து அவர் பெற்ற பட்டறிவும் எழுத்துக்களில் வெளி வந்துள்ளது. இவற்றை அவர் புரிந்து கொண்ட விதமும் அதை அவர் ஓமியோபதிக்குப் பயன்படுத்தி விதமும் அதையே உட்பகுத்தி ஆட்களுக்குப் பயனாக்கிய விதமும் சிறப்பாக உள்ளன. 


தி.சா.ராஜு அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றபடியால் அவருடைய வாழ்வுப் பட்டறிவு எமக்குக் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடும், அதனூடாகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் உலகளாவிய தமிழர்களும் ஓமியோபதி என்னும் அற்புதத்தைப் அவர் வழியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது மறுதலிக்கவும் கூடாது. 

தி.சா.ராஜு அவர்கள் எழுத்தின் தாக்கத்தால் இலங்கையில் பல மக்கள் ஓமியோபதியை நாடியுள்ளனர். கல்கியில் அவர் எழுத்தைப் படித்ததனால்தான் நான் ஓமியோபதிப் பக்கம் சென்று இன்றுவரை அதில் இருக்கிறேன். 


Comments